கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவர்கள் கதிர்காமம், செல்ல கதிர்காமம் மற்றும் கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்து பிச்சை எடுக்கிறார்கள்.
சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், மீதியுள்ள பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கதிர்காமம் காவல்துறையினர் சிறுவர்களை காவல்துறை காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை விடுவித்து மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த சிறுவர்கள் மத்தியில் உள்ள சில ஆண் சிறுவர்கள், யாத்திரிகர்களை ஏமாற்றி அந்த பணத்தில் மதுபானம் வாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம் சன்னதியில் உள்ள பூஜை கடைகளிலும், தனியார் தங்கும் விடுதிகளிலும், அலங்கார பொருட்கள் கடைகளிலும் சிறுவர்களை கூலி வேலைக்கு அமர்த்துவதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.