தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
நேற்று (28) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மையான விடயத்தினை சொல்லியிருக்கின்றார் என்றால் அது ராஜபக்ஸ குடும்பத்திற்கு பின்னடைவினை ஏற்படுத்தும் நிலை காணப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிறந்த முறையில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக காணப்படுகின்றது.நவம்பர் மாதத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதன் காரணமாக அரசியல்யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
அதேநேரம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைகின்றது.இந்த வகையில் ஜனாதிபதி தேர்தலை எந்தவகையிலும் நிறுத்தமுடியாது.அது அரசியல்யாப்புக்கு விரோதமாக அமையும்.
21ஆவது அரசியல்யாப்பின் திருத்ததிற்கு அமைவாக இரண்டரை வருடத்தினை பூர்த்திசெய்த பின்னர் பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது.அவ்வாறு பார்க்கும் போது இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கு இடமுண்டு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை பொறுத்த வரையில் தமக்கு சாதகமான நிலையினையே எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.அவருக்கு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் பசில் ராஜபக்ஸ,மகிந்த ராஜபக்ஸ போன்றவர்கள் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே வைக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்.