மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் திங்கட்கிழமை இன்று (01)பாடசாலை முடிவுற்ற பின்னர் பாடசாலை முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய இடத்திற்கு விரைந்த பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களிடம் ஏன் ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றீர்கள் என வினவினார். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலளிக்காது நின்றனர்.
இருந்த போதிலும், பாடசாலையின் தேவையற்ற அறம் இல்லாத தலையீட்டினை உடன் நிறுத்துங்கள், எமது பாடசாலை ஒழுங்கான முறையில் இயங்குவதனை தடுக்காதே, வலயக்கல்வி அலுவலகத்தின் நீதியற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம், 300 மாணவர்களைக் கொண்ட பாடசாலையும், 3000 மாணவர்களைக் கொண்ட பாடசாலையும் சமமா? வலயக் கல்விப் பணிப்பாளரே நீதியற்ற நிருவாக தலையீட்டினை பாடசாலையின் மீது திணிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.
இது இவ்வாறு இருக்க இவ்வாறு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக பாட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வலயக்கல்விப் பணிப்பாளர், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளையான வழிநடத்தலில் குறை கூறும் ஆசிரியர்களே தங்களது சுயநலத்திற்காக செயற்படாது மாணவர் நலன் கருதி செயற்படுங்கள், சிறந்த கல்வி நிருவாகத்தைக் குழப்பும் ஆசிரியர்கள், மாணவர்களது கல்வியை சீர்குலைக்கும் வகையில் நாசகார செயல்களை வெளியிலிருந்து முன்னெடுக்காதீர், போன்ற பல வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கல்வி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கலைந்து சென்றனர்.