தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு பிரிவு, தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசு இயக்குநரான ஜமீஷா முபீனால் திட்டமிடப்பட்டது என்று இந்த குற்றப்பத்திரிகை கூறுகிறது.
முபீன், ஈரோடு மாவட்ட காடுகளில் நடந்த சதிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்ட மௌலவி ஸஹ்ரான் ஹாஷிம் என்பவரால் ஈர்க்கப்பட்டார். இந்தநிலையில், தாக்குதலுக்குத் தயாராவதற்காக, முபீனுக்கு உதவிய ஆறு பேரின் பெயர்களையும், இந்திய என்ஐஏ என்ற தேசிய புலனாய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் திகதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வெளியே ஜமீஷா முபீன் ஓட்டிச் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதன்போது முபீன் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் அரசு கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் குறிப்பிடப்பட்ட முபீனின் இலக்குகளாக இருந்தன என்று ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட தாக்குதல்கள், சதி மற்றும் நிதியுதவி என 40 வழக்குகளில் இதுவரை குறைந்தது 175 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.