இந்நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு கலைத் துறைகளை உயிர்பித்த வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் உரியவாறான தீர்வை வழங்கவிருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
டவர் மண்டப மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்துக்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குவதுடன், அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்கும் நோக்கில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுவரையில் தெரிவுசெய்யப்பட்ட வயதான கலைஞர்கள் 102 பேருக்கு மாதாந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவியாக 7500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. டவர் மண்டப மன்றத்தின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இயங்கும் டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை, இந்த கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அதன்படி இம்மாதம் முதல் டவர் மண்டப மன்றத்தினால் வயதான 122 கலைஞர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
அதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது:
இந்நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு கலைத் துறைகளை உயிர்பித்த உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுடன் உங்களது இளமையும் போய்விட்டது. டவர் மண்டப மன்றம் உங்கள்மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்கின்றது. அதற்கமைய உங்கள் வாழ்வை வலுப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை எம்மால் மேலும் மேம்படுத்தமுடியும் என்று நம்புகின்றோம்.
கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடிய நம்பிக்கையாளர் சபை, அந்த கஷ்டங்களை ஓரளவு தணிக்கும் வகையில் ஓய்வுக்கால வாழ்வாதார உதவித்தொகையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் வயதான பல கலைஞர்களை இந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவித்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும்.
பல்வேறு துறைகளில் கலையை உயிர்ப்பித்த எம் நாட்டின் கலைஞர்கள் இன்று தொலைதூர கிராமங்களில் இருந்து வருகைதந்துள்ளனர். டவர் மண்டப மன்றம் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட்கள் உட்பட அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஆண்டுதோறும் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், டவர் மண்டப மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எம். எஸ். திசாநாயக்க மற்றும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.