இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் மத உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய நிதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அண்மையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார்.
தமிழின அழிப்பு மற்றும் காஷ்மீரில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு தொடர்பான ஒப்பீட்டு ஆய்வு மாநாடு டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ளத் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரைச் சந்தித்து இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்றும், காணிப் பிரச்சினைகள், ஆலயங்கள் மீதான தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடுகள், மாகாண சபைத் தேர்தல் மற்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமதங்கள் குறித்தும் இந்தியத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசென்றதாகத் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறிக்கொண்டு அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பான தமது கரிசனைகளையும் இந்திய அரசியல் தலைவர்களிடம் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
திருகோணமலை சிவன் ஆலயம் உள்ளிட்ட இந்து ஆலயங்களில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் குறித்தும் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இத்தகைய நடவடிக்கைகள் ஆலயங்களின் ஆன்மீகச் சூழலையும் வழிபாட்டு உரிமைகளையும் பாதிப்பதாகத் தாம் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.
இந்திய நிதியமைச்சர் தாம் முன்வைத்த விடயங்களை உன்னிப்பாகக் கேட்டறிந்ததுடன், இலங்கை அரசாங்கத்திடம் இவ்விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும், ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் உறுதியளித்ததாகச் சிறிநாத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாகவும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் உதவியுடன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
இந்தியாவில் வசித்துவரும் இலங்கை அகதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நாடு திரும்ப விரும்புவோருக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும், இந்தியாவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புவோருக்கான நிரந்தரக் குடியுரிமை வாய்ப்புகளை ஆராயவும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.








