இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இரு நாள் பேச்சு இன்று ஆரம்பமாகின்றது.
இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக் கிழமையுமாக இரு நாட்கள் இந்தப் பேச்சு நடை பெறவுள்ளது. இன்றையதினம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்தப் பேச்சில் இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த. சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பேச்சு நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சின்போது அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படவுள்ளது. இந்நிலையில், வடக்கு அபிவிருத்தி குறித்து பேசப்படுவதாக இருந்த சனிக்கிழமை பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய தமிழரசு கட்சியினர் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து ஒரேதடவையில் பேச வேண்டும் என்று விடுத்த அழைப்பை ஏற்று பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியுடனான இந்தப் பேச்சு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என்று தெரியவருகிறது.