மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தையும் காணமுடிவதில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் விசேட தேவையுடைய மக்கள் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இன்றைய தினம் விழிப்புலனற்றோருக்கான புத்தாண்டுக்கான உலர் உணவுப்பொருட்கள்,புத்தாடைகள்,கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் டிஷாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களுக்கான ஆணையாளர் நே.விமல்ராஜ்,திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ,அகிலன் பவுண்டேசன் பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலண்டன் வேள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன் அகிலன் பவுண்டேசன் ஊடாக சுமார் 70குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள்,புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பிரான்சில் உள்ள நலன் விரும்பி ஊடாக கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆரையம்பதி வடபத்திரகாளியம்மன் ஆலய பிரதமகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரன் குருக்களினால் விசேடபுத்தாண்டு உரையும் ஆசியுரையும் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டது.