அயோத்தி ராமர் கோயில் குழந்தை இராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
குழந்தை ராமர் நெற்றியில் 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை விழும்படி அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அயோத்தி இராமர் கோயிலானது வடிவமைக்கப்பட்டது.
இதற்காக 10 விஞ்ஞானிகள் கொண்ட குழுவானது ஒரு சிறப்பு கருவியை கண்டுபிடித்து வடிவமைத்தனர்.
நேற்று பகல் 12.16 மணிக்கு அயோத்தி பால இராமர் நெற்றியில் 3 முதல் மூன்றரை நிமிடங்கள் வரை சூரிய ஒளி விழும் நிகழ்வானது நடந்தது. இந்த நிகழ்வு சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு கோயிலில் கூடியிருந்தனர்.
இந்த சிறப்பு கருவியானது கண்ணாடிகள், லென்ஸ்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சூரிய திலக் பொறியியல் முறை எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா ரூர்க்கியைச் சேர்ந்த மத்திய கட்டிடவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (சிபிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானியும், இயக்குநருமான குமார் ராமசர்லா கூறுகையில், “இராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுவதற்கு வடிவமைக்கப்பட்ட கருவியானது ஆப்டோ-மெக்கானிக்கல் வகையை சார்ந்தது.
இந்த அமைப்பானது 4 கண்ணாடிகள் மற்றும் 4 லென்ஸ்களைக் கொண்டது. இது திருப்பும் வகையிலும், சாயும் வகையிலும் உள்ளது. இந்த லென்ஸ்கள் குழாய் அமைப்புகளுக்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோயிலின் மேல் தளத்தில் இந்த கருவி பொருத்தப்பட்டு கண்ணாடி மற்றும் லென்ஸ் மூலம் கீழ்தளத்தில் கருவறையில் உள்ள பால இராமர் சிலையின் நெற்றியில் விழுமாறு திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்த கருவியின் மேல் படும் அதிகமான வெப்பத்தை குறைத்து சிலையின் நெற்றியில் விழும்படி செயல்படுகிறது” என்றார்.