ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாகப் பென்டகன் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையானது, கடந்த ஜூலை மாதம் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் வெளியிட்ட 37.5 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட 25 சதவீதத்திற்கும் அதிகமாகும். எனினும், தற்போதைய மதிப்பீடு பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
போருக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, இந்த மோதலின் அரசியல் தாக்கங்கள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. எரிசக்திச் செலவுகள் உயர்ந்துள்ளமை மற்றும் போர் தொடர்பான பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை குடியரசுக் கட்சிக்குச் சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பென்டகனின் அண்மைய மதிப்பீட்டின்படி, போர் நடவடிக்கைகளுக்கான செலவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மீண்டும் நிரப்புவதற்கு மட்டும் 29 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், போரில் சேதமடைந்த அல்லது இழக்கப்பட்ட விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்களை ஈடுசெய்வதற்கு 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த மோதல் குறுகிய காலத்தில் முடிவடையும் என முன்னர் எதிர்பார்த்திருந்தார்.
ஆரம்பத்தில் ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்புகளைத் தாக்குவதற்கு அதிக விலையுள்ள துல்லிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், குறைந்த செலவிலான ஆயுதங்களைப் பயன்படுத்தும் உத்தியும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம் ஈரானுக்கு அதன் நிலத்தடி ஆயுதக் கிடங்குகளை மீளச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், சில பாதுகாப்பு கட்டமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வருவாயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடற்படை முற்றுகை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியத்தையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தீவிரமான போர் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான திட்டங்களைப் பென்டகன் தயாரித்து வருவதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கான முழுச் செலவுகளும் தற்போதைய மதிப்பீடுகளில் தெளிவாக உள்ளடக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







