கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் உயிரியல் ஆயுத திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நாடு உயிர்க்கொல்லி வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை உருவாக்கி வருவதாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், தற்போது, பெரியம்மை, ஆந்தராக்ஸ் முதலான கொடிய நோய்களைப் பரப்பக்கூடியவகையில், கிருமி ஸ்பிரே மற்றும் நச்சுப் பேனாக்களையும் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகள் ஆயுத சட்ட திட்டங்களை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அமெரிக்க அரசுத்துறையின் நிபுணர்கள் பலர், இந்த உயிரியல் ஆயுதங்கள் அணு ஆயுதங்களைவிட பயங்கரமானவையாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்கள்.
ஏற்கனவே வட கொரியா தன்னிடம் உயிரியல் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தொடர்ந்து உருவாக்கிவருவதாகவும், கோவிட் காலகட்டத்தில் கூட, நிலவிய பயங்கர சூழலை பயன்படுத்திக்கொண்டு உயிரியல் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடும் என்றும் போர் ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்களை விட வட கொரியா உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தத்தான் அதிக வாய்ப்புள்ளது என்றும் அணு ஆயுத நிபுணர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.