திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசை பகுதியில் நேற்று முன்தினம் (22-04-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
அப்போது அர்ச்சகர் ஒலிவாங்கியில் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்த நிலையில் அர்ச்சகர் வைத்திருந்த ஒலிவாங்கியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி ஒலிவாங்கியை தூக்கி வீசினார்.
இதன்போது, ஒலிவாங்கி அருகில் இருந்த பெண் விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கியதில் அர்ச்சகர், மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு முச்சக்கரவண்டி மூலம் அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இறந்த பெண் உடலை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.