உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு இது தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு புலனாய்வு குழுக்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பணம் பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ள அனைத்து வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.