விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு கடல் உணவு சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கேப்ரியல் அட்டல் இந்த விடயம் தொடர்பில் உறுதி அளித்துள்ளார்.
இதன்படி, விவசாயிகளுக்கான உறுதியான நடவடிக்கைகளில் பணியாற்றி வருவதாகவும் கேப்ரியல் அட்டல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி 67 நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்த நிலையில், கூடுதல் நடவடிக்கையாக பிரதமர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதல் பகுதியில் இருந்து பூச்சிக்கொல்லிகளை குறைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், விவசாய நெருக்கடி காரணமாக நடவடிக்கை இடைநித்தப்பட்டுள்ளது.
அத்துடன், பண்ணைகளுக்கான பண உதவி, 100 நீர் சேமிப்பு அல்லது நீர் பாசன திட்டங்களை முன்னெடுத்தல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கான உதவித்திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உள்நாட்டு துறைகளை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிறந்த 25 ஆண்டுகால தொழில் வாழ்க்கையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு முதல் விவசாய ஓய்வூதிய நிதி சீர்திருத்தம் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்தப் போராட்டம் மற்றும் பேச்சிவார்த்தைகளுக்குப் பின்னர் பிரான்ஸ் அரசாங்கம் விவசாயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.