ஊடகவியலாளர் அமரர் தராகி டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டதான அஞ்சலி நிகழ்வும்,கவன ஈர்ப்பு போராட்டமும் நேற்று (28) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது, மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன்,அமரர் தராகி சிவராம் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டு, நினைவு பேருரைகளும் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியதுமான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் அஞ்சலியில் கலந்து கொண்டிருந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
அதேசமயம் இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள் ,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.