மட்டக்களப்பில் கடந்த மூன்று நாட்களாக ஒரு குரல்வழிச் செய்தி மக்கள் மத்தியில் பரவலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த குரல் வழிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு நகரிலுள்ள உள்ள மட் / கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் தரம் ஐந்தில் கல்விகற்று வரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்திற்கு வெளியில் பெற்றோருக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார் என்றும், அந்த வேளையில் அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும், சேட்டும் மற்றும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு வந்த இளைஞன் ”பாடசாலையில் அனைவருக்கும் ஊசி போட்டுவிட்டதாகவும் , உங்களுக்கு மட்டும் தான் இன்னும் ஊசி போடவில்லை” என தெரிவித்து, வீதியில் வைத்தே குறித்த சிறுமிக்கு ஊசியை செலுத்திவிட்டு அவன் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து.
சிறுமி வீட்டிற்கு சென்று சம்பவம் தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவிக்க , பெற்றோரும் பாடசாலைக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வினவியுள்ளனர்.
ஆனால் பாடசாலையோ அவ்வாறு எந்த ஊசியும் மாணவர்களுக்கு போடப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் குறித்த சிறுமியும் காய்ச்சல் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் குறித்த சிறுமியின் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு சம்பவத்தை தெரியப்படுத்தியதன் அடிப்படையில் குறித்த குரல் வழி செய்தியை அந்த ஆசிரியர் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறுமியின் இரத்தத்தில் எந்தவித மருந்துகளும் இல்லை என்றும் , சிறுமியின் உடலில் ஊசி ஏற்றப்பட்டதற்கான எவ்வித தழும்புகளும் இல்லை என்றும் மட்டு போதனா வைத்தியசாலை தெரிவித்திருந்தது.அதே போல் குறித்த பாடசாலையும் தங்களது cctv காணொளிகள் மூலம் அவ்வாறான எந்த சம்பவமும் நடைபெறவில்லை என உறுதிப்படுத்தியிருந்தது.
அதேசமயம் சிறுமி ஏன் தனது பெற்றோரிடம் அவ்வாறு கூறினார் என்று தெரியவரவில்லை என்பதுடன், இந்த சம்பவத்தின் அடிப்படையிலும், முகப்புத்தகத்தில் மற்றும் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வந்த குரல் வழிச்செய்தியின் அடிப்படையிலும் செய்தி பரப்பிய ஆசிரியரிடம் விசாரணைகளை முன்னெடுத்த மட்டு தலைமையக பொலிஸார், முழுமையான சம்பவம் தெரியாமல் பொய் செய்தி பரப்பிய ஆசிரியரை எச்சரித்துள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் வரும் போது உண்மையை சரியாக அறிந்து கொள்ளாமல் வெளியிடுவதன் பாதகமான விளைவுகளையும் ஆசிரியரிடம் அறிவுறுத்தியதாகவும் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தால் வேறு சில நல்ல விடயங்கள் காணப்பட்டாலும், அதேசமயம் அதற்கு எதிர்மறையான இவ்வாறான சில விடங்களும் காணப்படுகிறது. ஒரு செய்தியின் உண்மைத்தன்மை தெரியவில்லை என்றால் பதிவிடும் செய்தியில் “இது தொடர்பான உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை” என்று பதிவிடுவதனால் மக்கள் பீதியடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
ஏதாவது ஊரில் நடந்தாக கூறப்படும் சம்பவம் ஒன்று உங்கள் மத்தியில் பரப்பப்படுகிறது என்றால், அந்த சம்பவத்தை நீங்களும் பரப்புவதை நிறுத்தி விட்டு உங்கள் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி செய்தியதை உறுதி செய்து கொள்வது எந்த சூழ்நிலையிலும் சாலச்சிறந்தது. அத்தோடு உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்வது வீணான சந்தேகங்களை உள்ளூர் மக்கள் மத்தியில் பரவுவதை தடுப்பதற்கு உதவியாக இருக்குமென்று கருதப்படுகிறது.