வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ராஜகிரிய பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்றுமுன்தினம் (08) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலந்தில் தொழில் வழங்குவதாக பணம் பெற்றுக்கொண்ட இந்நிறுவனம் ராஜகிரிய பிரதேசத்தில் வீசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் இந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
போலந்தில் தொழில் வழங்குவதற்காக நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உறுதியளித்தபடி தொழில் வழங்கப்படவில்லை எனவும் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, சோதனை நடத்தப்பட்டு, நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், அவர் நேற்று (09) கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 இல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.