கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக சேவைகள் செயற்பாட்டிற்கு எதிரான அடக்கு முறைகளும் அத்துமீறல்களை கண்டித்து இடம்பெற்று வரும் போராட்டத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது நேற்று (12.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உரிமைக்கான போராட்டம் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பிரதேச செயலகத்தின் முன்னால் ஆரம்பமாகிய நிலையில் நேற்றுடன் 50 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்த 50 ஆவது நாளை நோக்கிய போராட்டத்தை முன்னிட்டு நேற்று (12) காலை 10 மணியளவில் போராட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
இதன்போது, தமிழ் அரசியல் வாதிகளே ஏன் இன்னும் மௌனம், ஒரு அரசியல்வாதியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக 40 ஆயிரம் பொதுமக்களை துன்புறுத்துவது நியாயமா?
பிரதேச செயலகத்துக்கு மலசல கூடம் திருத்துவதற்கு கூட நிதிவழங்கப்படுவதில்லை, பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக மாற்றுவதை உடன் நிறுத்து போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் கறுப்பு கொடிகள் மற்றும் பொம்மைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டபேரணியை முன்னெடுத்துள்ளனர்.