மன்னார் – முருங்கன் பகுதியில் திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் ” குறித்த பகுதியில் நேற்று (23) காலை இரண்டாவது நாளாகவும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தனித்து காட்டு யானை ஒன்று நடமாடி திரிகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் (22) காலையும் குறித்த யானை அந்த பிரதேசத்தில் நடமாடியது.
மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குறித்த யானையை காட்டுக்குள் துரத்தி உள்ளனர். எனவே குறித்த யானையை உடனடியாக இந்த பகுதியில் இருந்து பிடித்து பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை செயலாளரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினோம். உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.
குறித்த பகுதி மக்கள் யானையால் பீதி அடைந்துள்ளனர். தற்போது சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தென்னை மரங்களை யானை சேதமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறித்த காட்டு யானையை பிடித்து அங்கிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்“ என அருட்தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.