அனுராதபுரம், ஹித்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் நேற்று (23) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக திரப்பனை வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டமொன்று தோட்டத்திலிருந்த பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த நபரொருவர் இந்த யானைகளை விரட்ட முயன்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த யானை ஒன்று இவரைத் துரத்திச் சென்றுள்ள நிலையில் குறித்த நபர் தனது கையிலிருந்த துப்பாக்கியால் யானையைச் சுட்டுக் கொலை செய்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
7 அடி, 3 அங்குலம் உயரம் கொண்ட 20 வயதுடைய ஆண் யானையொன்றே உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஹல்மில்லகுளம், துருவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.