சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும், அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று கோரியும் நேற்று (29) சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு குழுவினர் சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிபரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிபருக்குச் சார்பான பல்வேறு விடயங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய மாணவர்களையும் பெற்றோர்களையும் காணக்கூடியதாக இருந்தது. அதே நேரம் அதிபரின் இடமாற்றத்தை ஆதரித்தோரும் அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
குறித்த இரு சாரரினதும் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தன. இங்கு சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் போக்குவரத்தை சீர்செய்ததுடன் ஆர்பாட்டக்காரர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் வேண்டும் என்றும் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்யாது விட்டால் எங்கள் பிள்ளைகளின் விடுதலைப் பத்திரத்தை தா போன்ற கோசங்கள் எழுப்பினார்கள். இதே வேளை, அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கு தெரியாமல் சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட நிர்மாணத்தில் அதிபர் ஊழல் செய்ததாகவும் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்றும் கோசமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட களத்திற்கு வருகைதந்த சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரையும்பெற்றுக் கொண்டார். அத்தோடு தங்களின் கோரிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கு அறிவித்து அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வித்திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது கட்டிட நிர்மாணத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாவென கல்வித்திணைக்களத்தின் உயரதிகாரிகளும், உள்ளக கணக்காய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விடயங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித்திணைக்களம் என்பன முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களின் கல்வியை வைத்து இவ்விடயத்தில் பல்வேறு அரசியல் சித்துவிளையாட்டுக்கள் இடம் பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது குறிப்பிடத்தக்கது.