மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தாழ் நில பகுதியினை அத்துமீறிய வகையில் பிடிக்க முயன்ற நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தாழ் நில பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தொடர்ந்து நேற்று (26) தொடக்கம் ஒரு குழுவினர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கமராக்களை பூட்டி அப்பகுதியில் வேலிகள் இடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து,
இதன்போது குறித்த இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அங்கு காணிகளை அடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் பாதுகாப்பு கமராக்ககள் என்பன அகற்றப்பட்டு, மாநகரசபையின் வாகனங்களில் ஏற்றப்பட்டு, மாநகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியானது மட்டக்களப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகளின்போது வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான பிரதான பகுதியாக காணப்படுவதுடன் அது அடைக்கப்படுமானால் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.