ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி திருகோணமலை கந்தளாய் முள்ளிபத்தானை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று(27) காலை திருகோணமலை -கொழும்பு பிரதான வீதியின் 96ஆவது குறுக்கு வழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் உயர்தர மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சந்தியில் வீதியோரத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன், எவ்வித அதிகாரிகளும் கண்டுகொள்ளாத காரணத்தினால், திருகோணமலை – கொழும்பு பிரதான வீதி 96 சந்தியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்.
அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கந்தளாய் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் காமினி பண்டாரவை அழைத்து பெற்றோருடன் கலந்துரையாடினார்.
அந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கைக்கு தகுந்த பதில் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.