மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளை வலுவூட்டும் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இதன் ஒரு செயற்பாடாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாலர் பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பான 02 நாள் பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் பணிமனையில் உள்ள Dr.S.சதுர்முகம் மண்டபத்தில் நேற்று (27) ஆரம்பமானது.
இவ் நிகழ்வானது சுகாதார மேம்பாட்டு பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பற் சுகாதார சிகிச்சையாளர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், ஆரம்ப பிள்ளைபராய பராமரிப்பு உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் என்பனர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பட்டறையின் மூலமாக பாலர் பாடசாலை சிறுவர்களின் போசாக்கு, நோய்களிலிருந்து பாதுகாக்கும் முறை, ஆரம்ப பிள்ளைகளின் ஆரோக்கிய விருத்தி மற்றும் மகிழ்ச்சியான கற்றல் சூழல் என்பனவற்றை உருவாக்க முடியுமென மேலும் குறிப்பிடப்பட்டது.
இதன் போது சமூக மட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதன் மூலமாக இவர்கள் அந்த பாலர் பாடசாலைகளுக்கு சென்று குறித்த அந்ததந்த ஆசிரியர்களை அறிவுறுத்தி அவர்களை மேலும் மேம்படுத்துவதற்காகவே இந்த பயிற்சி நெறி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.