வாகனம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், வாகனம் இல்லாத கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அம்புலன்ஸ் வண்டியில் அடிக்கடி கொழும்பு வருவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அம்புலன்ஸ் வண்டியில் கொழும்பு வருவார் என தெரிவித்த சபாநாயகர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது போக்குவரத்து மூலம் கொழும்புக்கு வருவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 116 பேர் மகஜர் ஒன்றை சமர்ப்பித்து தமக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு பாராளுமன்றக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.