எதிர்வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வெல்பவர்கள் அனைவருக்கும் பணப்பரிசுகளை வழங்கப்போவதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அச்சங்கம் புதன்கிழமை (29) தெரிவித்துள்ளது.
இதன்படி, பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 100,000 அமெரிக்க டொலர்களும் வெள்ளிப் பதக்கத்துக்கு தலா 50,000 டொலர்களும், வெண்கலப் பதக்கத்துக்கு தலா 25,000 டொலர்களும் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.
இப்பரிசுத்தொகையை போட்டியாளர், பயிற்றுநர் மற்றும் தேசிய சம்மேளனத்துக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இதன்படி, தங்கப்பதக்கத்துக்கு வழங்கப்படும் 100,000 டொலர்களில் போட்டியாளர் 50,000 டொலர்களைப் பெறுவார். அவரின் தேசிய சம்மேளனத்துக்கும் பயிற்றுநருக்கும் தலா 25,000 டொலர்கள் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் உமர் கிரேம்லேவ் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்யும் உரிமையை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடமிருந்து (ஐ.பி.ஏ) சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஓ.சி) நீக்கியுள்ள நிலையில் அச்சங்கம் இப்பணப்பரிசு அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1896 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் ஐ.ஓ.சியினால் பணப்பரிசுகள் வழங்கப்பட்டதில்லை. எனினும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மெய்வன்மைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 50,000 டொலர் வழங்கப்படும் என மெய்வன்மைப் போட்டிகளுக்குப் பொறுப்பான வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (சர்வ.தேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனம்) கடந்த மாதம் அறிவித்தது.
இத்தீர்மானத்துக்கு வேறு பல விளையாட்டுகளின் சர்வதேச சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், குத்துசண்டையில் 3 பதக்கங்களுக்கும் பரிசு வழங்குவதாக ஐ.பி.ஏ. அறிவித்துள்ளது. ஐ.பி.ஏ. அறிவிப்பின்படி, மெய்வன்மைப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களைவிட குத்துச்சண்டையில் தங்கம் பெறுபவர்களுக்கு இரு மடங்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐ.பி.ஓ) ரஷ்ய எரிவாயு நிறுவனமான கேஸ்புரோமின் ஆதரவுடன் இயங்குகிறது.
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளை இச்சங்கமே முன்னர் ஏற்பாடு செய்துவந்தது. எனினும், நிர்வாகம், நிதி, போட்டி மத்தியஸ்தம் முதலியன தொடர்பான சர்ச்சையின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் குத்துச்சண்டை ஏற்பாட்டு உரிமையும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஐ.ஓ.சியே ஏற்பாடு செய்தது. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலும் ஐ.ஓ.சி.யே குத்துச்சண்டை போட்டிகளுக்கு பொறுப்பாக உள்ளது. ஐ.பி.ஏ.வுக்கான தனது அங்கீகாரத்தை கடந்த வருடம் ஐ.ஓ.சி. நீக்கியிருந்தது.