சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்லப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் தொடர்பில் காவல்துறை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மின்சாரம் மற்றும ஹைப்ரிட் வாகனங்களுக்கு 3 ஆவணங்களும் கனரக வாகனங்களுக்கு 5 ஆவணங்களும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சாதாரண வாகனகளுக்கு ..
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல்(புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்) (Vehicle Revenue Licence Service)
- வாகன காப்பீடு (vehicle insurance)
- உமிழ்வு சான்றிதழ் என்பன அவசியம். (Emission Certificate)
கனரக வாகனங்களுக்கு ஐந்தாவதாக வாகனத் தகுதிச் சான்றிதழ் அவசியமாகும், எனினும், மின்சார அல்லது ஹைப்ரிட் வாகனங்களுக்கு உமிழ்வு சான்றிதழ் அவசியம் இல்லை.
அத்துடன், வாகனத்தில் பயணிக்கும் போது வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என காவல்துறை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனம் ஒன்றை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனப் பதிவுச் சான்றிதழ் அவசியம் என தவறாக கூறியமை சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.