கண்டி – திகன, கெங்கல்ல வீதியில் மரம் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று காலை (10) இடம்பெற்றுள்ளதுடன்,
வேனின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியிலுள்ள மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததைக் கண்ட வேன் சாரதி, விபத்தைத் தவிர்க்க முயன்றார்.
எனினும், வேனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மதில் மற்றும் தொலைபேசிக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாகனத்தில் பயணித்த இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றும் பல பாடசாலை மாணவர்கள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த மரத்தை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் காணியின் உரிமையாளருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கைவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.