2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார்.
குறித்த தாக்குதல்கள் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தவே ஜனாதிபதி இந்த குழுவை அமைத்துள்ளார்.
குறித்த குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமை தாங்குகிறார். அவரின் கீழ் தலைமையிலான இந்தக் குழுவில், சக உறுப்பினர்களாக இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரநிலை அதிகாரியான கே.என்.கே. சோமரத்ன மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி டபிள்யூ.எம்.ஏ.என் நிசேன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட உதவி ஆலோசகர் சாரதாஞ்சலி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை,தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் எவை? அதற்கு அமைவாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு வவுணத்தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டனர் என்பதை இராணுவ புலனாய்வுச் சபை, குற்றப் புலனாய்வு பிரிவு என்பன நான்கு மாதங்களாக நம்பியிருந்தமைக்கான காரணம் என்னவென்றும், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாராணைகளில் தெரியவந்த தகவல்கள் குறித்தும் இந்த குழு ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.