இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, காலை 10.30 முதல் 5.00 மணி வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் மாலை 5.00 மணிமுதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 19 ஆம் திகதி தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
20 ஆம் திகதி பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.