மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் முஸ்லிம் நகை வியாபாரி ஒருவரைத் தாக்கி, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகளை மீறிய மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குளியாப்பிட்டியவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான சாஹுல் ஹமீது சஷேக் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து தமக்குத் தெரியாமல் கொள்வனவு செய்யப்பட்ட தங்கம் தொடர்பான விசாரணைக்காக பொலிஸார் தம்மைத் துன்புறுத்தியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக வீடு திரும்பாவிட்டால் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கைது செய்வதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டுக்குத் திரும்பிய தம்மைக் கைவிலங்கிட்டு முழங்காலிடச் செய்து, மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் பொலிஸார் தாக்கியதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் வாகனத்திற்குள் வைத்தும் தொடர்ந்து தாக்கி, தங்கம் மற்றும் பணத்தை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் தங்கம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதுடன், பொலிஸாரின் தாக்குதல் குறித்து மருத்துவ அதிகாரிகளிடமோ நீதிமன்றத்திலோ முறைப்பாடு செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த பொலிஸ் அதிகாரிகள், விசாரணையின் ஒரு பகுதியாகவே வர்த்தகர் சட்டரீதியாகக் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஆனால், மனுதாரர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை ஆராய்ந்த நீதிமன்றம், பொலிஸ் அதிகாரிகளின் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன்படி, சம்பந்தப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் இலங்கை அரசியலமைப்பின் 11, 12(1) மற்றும் 13(2) ஆகிய உறுப்புரைகளின் கீழ் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தமது சொந்த நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாவை ஆறு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.








