முதன்மை சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non – consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.
மேலும் 967 கணக்குகள் இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.