திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திருகோணமாலை சாஹிரா கல்லூரியின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் என்னிடமும் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
பரீட்சை மண்டபத்துக்குள் பர்தா அணிந்து வருவதாக இருந்தால், இரண்டு காதுகளும் தெரியும் வகையில் இருக்கவேண்டும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதனை இந்த இடத்தில் நான் தெரிவிக்கவில்லை. இந்த விடயங்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களும் இருக்கின்றன. அது தொடர்பாகவும் தற்போது நான் ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.
இந்த விடயம் காரணமாகவே இவ்வாறு பரீட்சை பெறுபேறு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தை யாரோ ஒரு ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அளவுக்கு அதிக வகையில் இதனை எடுத்துக்கொண்டுள்ளார். என்றாலும் மாணவர்களின் பெறுபேறுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பரீட்சைகள் ஆணையாளர் இன்னும் சில தினங்களில் அதனை வெளியிடுவார் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.