அதிபர் ரணில் விக்ரமசிங்க மன்னாரிற்கு வருகைத்தந்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வாக்குகளை கோரவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (21) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆலம் மேலும் தெரிவிக்கையில்,

” இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை நீண்ட புரையோடிப்போன ஒரு விஷயமாக உள்ளது.கடந்த வாரம் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த ரணிலை சந்திப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பயனளிக்கவில்லை.
ரணில் விக்ரமசிங்க மன்னார் விஜயம் எதற்கானது என்று கூட தெரியவில்லை.வடக்கில் உள்ள பல்வேறு வளங்களை எவ்வாறு அந்நியர்களின் கையளித்து எவ்வாறு இந்த நாட்டிற்கான வருவாயை பெற்றுக்கொள்ளலாம் என்பதே காரணமாக உள்ளது.
நிலமாக இருந்தாலும் சரி கடலாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.கடலில் இருக்கின்ற அனைத்து வளங்களும் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை யாக இருந்தாலும் சரி கணிய மணல் அகழ்வாக இருந்தாலும் சரி இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை கதைப்பதற்காகவே மாத்திரம் ரணிலை சந்திக்க சந்தர்ப்பம் கோரினோம். எந்த அபிவிருத்திக்கும் நாங்கள் தடையானவர்கள் இல்லை.எமது வாழ்வாதார பிரச்சினையை கதைப்பதற்கு அவரை அணுகுகின்ற போது அவர் அதை தட்டிக் கழிக்கின்றார்.
வடமாகாணமும் மன்னார் மாவட்டமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எதிர்வரும் மாதங்களில் அதிபர் தேர்தல் ஒன்று வரவுள்ளது.
அப்போது ரணில் மன்னாரிற்கு வந்து தான் ஆக வேண்டும். கடற்றொழிலாளர்களிடம் வாக்கு கேட்கத்தான் வேண்டும். அப்போது கடற்றொழிலாளர்களே இறுதி முடிவு எடுப்பார்கள்” என்றார்.