மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடற்கரைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 2.30 மணியளவில் மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்கள் சிலரால் எரிக்கப்பட்டமையை கண்டித்து பூனொச்சிமுனை துறைமுக ஆழ் கடல் மீனவர்கள் நேற்று (23) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பூநொச்சிமுனை துறைமுகத்தில் மீனவர் ஒருவரின் 25 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி படகு ஒன்றும் ,மீன்பிடி உபகரணங்களும் எரிக்கப்பட்டமையை கண்டித்து பிரதேச மீனவர்களும் மீனவ குடும்பங்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிக்கப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவரின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும் தமிழ், முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மீன்பிடி படகை எரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து பதாதைகளை தாங்கியும் கோஷங்கள் எழுப்பியும் மீனவர்கள் இதன் போது கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பேரணியாக பூனொச்சிமுனை கடற்படையினர் முகாம் வரை பேரணியாக சென்றனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர். ஜீவேந்திர டயஸ் மீன்பிடி படகு எரிக்கப்பட்டமை தொடர்பில் இரண்டு நபர்களை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக மீனவர்களிடம் தெரிவித்தனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.