இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் பிரித்தானியா பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
கடந்த 20 வருடமாக சட்டன் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவுள்ளார்.
அத்தோடு, சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர், தான் புனித பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும் இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சட்டத் தொழிலைத் தொடர்ந்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணி தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றார்.
மேலும், தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.