இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுவினர் நேற்று அறிவித்தனர்.
இதில் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் சீனியர் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இளம் வீரர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட அணிக்கு சுப்மன் கில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அசாமை சேர்ந்த ரியான் பராக் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ரியான் பராக் 573 ஓட்டங்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவும் தேர்வாகி உள்ளார்.
இந்தியா – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி ஜூலை 6 ஆம் திகதி ஹராரேவில் தொடங்குகிறது.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (அணித்தலைவர் ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.