திருக்கோணேஸ்வரம் கோவில் அருகாமையில் கசிப்பு விற்பனை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, திருக்கோணமலை திருக்கோணேஸ்வரம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெட்டிக்கடையொன்றில் கசிப்பு விற்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவ்விடயம் சைவமக்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் தரும் செய்தியாகும். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு சைவ நிறுவனம்கள் தொடர்ந்து வேண்டுதல் விடுத்த போதும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தங்களிடமும் இவ்விடம் தொடர்பாக முறையிட்ட போதும் இதுவரை பயன்கிட்டவில்லை.புனிதமான வரலாற்றுத்தலமருகே இவ்வாறான சம்பவம் நடைபெறுவது அருவருக்கத்தக்க செயலாகும்.
தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உடன் பெட்டிக்கடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றுள்ளது.