ரணிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் கிடையாது நான் அவருக்கு எதிராகத்தான் வாக்கு போட வேண்டியவன் ஏனென்றால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர் என்னை சிறையில் அடைத்ததில் பிரதான பங்கு வகிப்பவர் இருப்பினும் தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்கு அரசியல் செய்ய முடியாது என சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு நெடியமடுவில் (26) அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒருமுறை வர வேண்டும்.
கிழக்கு மாகாணம் வறுமையுடைய மாகாணம் என்பதை அவர் உணர்ந்துள்ளார், அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அபிவிருத்தியின் மூலம் உற்பத்தி துறையின் சக்தி மிக்கவர்களாக நாம் மாற வேண்டும். நாட்டை முதலில் கட்டி எழுப்புவதை பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
அதே வேளை வறுமையான மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.
எனவே நாம் ஒன்றுபட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் தான் சர்வதேச மற்றும் நாட்டின் சவால்களை வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.