மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்த நிபுணர் குழு அறிக்கையை இலங்கையின் நீதி அமைச்சகம், கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
2024 ஜூன் மாதத்திற்குள் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏப்ரலில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போதே இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த விடயத்தில் உள்வாங்கப்படுவதால், கல்வி அமைச்சின் கருத்துக்களைப் பெறுவதற்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக நீதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகளில் மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்வதற்கான நடவடிக்கையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பரிந்துரை, பாடசாலைகளில் ஒழுக்கத்தை வளர்ப்பதை கடினமாக்கும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவினால், சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பான அனைத்து சர்வதேச சாசனங்களிலும் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.
இதன்படி, சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டியது கட்டாயமாகும் என்று ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.