நேற்றைய தினம் (30) சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பந்தனின் மறைவிற்கு பலர் தரப்பினரும் இரங்கல் தெரிவித்தது வருகின்றனர்.
சரத் பொன்சேகா
இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய இரா சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.
இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியினை அவர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த
இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தனின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறைவிற்கு இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்தோம்.
அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த இரங்கல் செய்தியினை கிழக்கு மாகாண ஆளுநர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. அவர்களின் மறைவு குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் எழுச்சியூட்டும் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர்”என பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினரான சம்பந்தன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 91வது வயதில் இன்று இறைபதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்திய இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்காண அயராது உழைத்து வந்தவருமான இரா. சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாதன் தெரிவித்தார்.
சம்பந்தன் ஐயாவின் பிரிவால் வாடும் அவரது மனைவி , மக்கள், மருமகள் ,பேரன் உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.