அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயம் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் போது அது ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அமைச்சுப் பணியாளர்கள் வரிக் கோப்புகளை ஆரம்பிப்பது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 வகைகளுக்கான கோப்புகளைத் திறக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளதுடன், வரிக் கோப்பினைத் திறப்பதன் மூலம் வரி செலுத்துவதை கட்டாயமாக்க முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது 80% – 20% ஆக இருந்த மறைமுக மற்றும் நேரடி வரி விகிதம் தற்போது 70% – 30% என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த வருட இறுதிக்குள் அந்த விகிதாசாரம் 60%-40% இருக்கும் எனவும் அதுதான் அரசின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.