பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்திருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம், தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும் தமிழ்மக்கள் மத்தியிலும் நிலவும் ஒற்றுமையின்மையே இதற்குக் காரணம் என்று விசனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 3 ஆம் திகதி தாக்க முற்பட்ட சம்பவம் மற்றும் நேற்று முன்தினம் அவர் கைதுசெய்யப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமையையும், அவரது சிறப்புரிமையை மீறும்வகையில் அவர் கைதுசெய்யப்பட்டமையையும் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, கடந்த 5 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சற்குணதேவி (அருள்மதி) மருதங்கேணியில் கைதுசெய்யப்பட்டமையையும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தையிட்டி போராட்டத்தில்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டிக்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டபோது, கட்சி பேதங்களை மறந்து அதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைக் காண்பித்திருந்தால் இந்தளவுக்குக் கைதுகள் தொடர்ந்திருக்காது. சரி, தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருநாள் பாராளுமன்ற அமர்வைப் பகிஷ்கரித்திருந்தால், இந்த அடக்குமுறைகள் நிகழ்ந்திருக்காது.
தெற்கில் நடைபெறும் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கின்ற யாழ்ப்பாணத்தைத் தளமாகக்கொண்ட மகளிர் அமைப்புக்கள், தமிழ் தாய்மார்கள் தாக்கப்பட்டபோதும், சற்குணதேவி கைதுசெய்யப்பட்டபோதும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்?
தமிழ்மக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைப் பாருங்கள். அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, இலங்கையின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இன ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.