அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் சிங்கள மொழியில் தரவுகள் வழங்கப்பட்டமையால் பரீட்சார்த்திகள் சிரமங்களை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 13 ஆம் மற்றும் 16 ஆம் திருத்தங்களில் சிங்களம் மற்றும் தமிழ் அரச கரும மற்றும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆங்கிலத்துக்கு இணைப்பு மொழி என்ற அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வெறுமனே எழுத்து வடிவில் இருக்கும் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறுபான்மை இனத்தவரை பெரிதும் பாதிக்கிறது. 30.06.2024 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை நடாத்தப்பட்டது.
அதில் கணனிப் பரீட்சையில் விரிதாள் தொடர்பான கேள்விக்கான தரவுகள் முழுவதுமாக சிங்கள மொழியிலையே வழங்கப்பட்டதால், பரீட்சையை எதிர்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.
பின்பு அதற்கான மொழிபயர்ப்பு செய்யப்பட்ட போதிலும் பரீட்சார்த்திகளின் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டமை எங்களுக்கான அநீதியாகவே உள்ளது.
இது பெரும்பான்மையாக சிங்கள மொழி பேசுபவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்களுக்கு பாதகமாகவும் இருந்ததை சுட்டிக்காட்ட விரும்புவதோடு, இவ்வாறான தவறு இனி இடம்பெறாதவண்ணமும் நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்பதோடு அதற்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில், குறிப்பாக சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகள் பற்றி பொது மக்களின் உணர்திறனும்,மதிப்பும் குறைவாகவே உள்ளது.
அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அரச கரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தி மொழி ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.