தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸை நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
மறைந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நேற்று(02) யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை என்னும் பிரதேசத்தில் தமிழர்களுடைய தலைநகரம் நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிங்கள மாயமாகி, பெளத்த மதமாகி இருக்கின்ற இந்த கால கட்டத்தில் நிலத்தின் விடுதலைக்காக எங்களை கொள்கையினை நிலைநாட்டிய எங்கள் பெரும் தலைவர் இரா.சம்பந்தனை இழந்திருக்கின்றோம்.
அடுத்ததாக திருகோணமலை மாவட்டத்தின் குகதாஸ் அதிவிருப்பு வாக்குகளை பெற்றதன் காரணமாக அவரை அடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தெரிவுசெய்வதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கின்றது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களது இறுதிக்கிரியை எதிர்வரும் 07ஆம் திகதி இடம்பெற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி குறித்த வெற்றிடத்திற்கு குகதாஸை நியமிப்பது என எண்ணியுள்ளோம்.
தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தில் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளை குகதாஸ் பெற்றதன் காரணமாகவும் அவரை நியமிப்பது என்று மத்திய குழு தீர்மானம் எடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.
அதேசமயம் “இரா.சம்பந்தனின்” மறைவினால் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு மறைந்த இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக கதிரவேல் சண்முகம் குகதாசனின்” பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு 2391/14 இலக்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
16770 விருப்பு வாக்குகளை பெற்ற இவரின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.