இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்ற இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத நிலையில் அந்த சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என 116 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.
இதனால் நேற்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.