இந்த வருட இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்களின் பாவனைக்காக நேற்று (04) கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் வள்ளிபுரம் முருகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணேசமூர்த்தி, தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் முதலாவதாக ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சஜித் பிரேமதாச அவர்கள் மாணவர்களுடன் கற்றல் செயல்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் நன்மை கருதி பரதநாட்டிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான ஆடைகள் மற்றும் அணிகள் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாகவும் வழங்கியதுடன், உயர்தர மாணவர்களுக்கு ஆங்கில அகராதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரினால் சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுவரையில் 251பாடசாலைகளுக்கு 307.5மில்லியன் ரூபா பெறுமதியில் ஸ்மாட் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இலங்கையில் உள்ள 88 அரச பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளையும், போக்குவரத்தினையும் மேம்படுத்தும் பொருட்டு பஸ் வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக 489.2 மில்லியன் ரூபாகள் செலவிடப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள மக்களின் வைத்திய வசதிகளை மேம்படுத்தும் வகையில் 61 வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் வாங்குதற்காக 183.7மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் இந்த பாடசாலைக்கு சுமாட் கட்டமைப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் ஊடாக இலங்கை முழுவதும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 365 கிராமங்களையும் மையப்படுத்தி இந்த வருட இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கு மீண்டும் வருவேன்.
இலங்கை முழுவதும் 10096 அரச பாடசாலைகள் காணப்படுகின்றன. அந்த அரச பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக தரமுயர்த்தும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்க கூடிய 381 பாடசாலைகளையும் ஸ்மார்ட் பாடசாலையாக தரமுயர்த்துவதுடன், இந்த பாடசாலையினையும் தரமுயர்த்தி இங்கு நான் வருவேன்.
மட்டக்களப்பு மாவட்டமானது பல்துறைசார்ந்த மக்கள் வாழும் மாவட்டமாக இருக்கின்றது. அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வாழும் மாவட்டமாகவும் உள்ளது.
இலங்கை வரலாற்றில் நாடு சுதந்திரம் அடைந்தன் பின்னர் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாக இந்த நிகழ்வினை பார்க்கின்றேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டமும் முன்னிலைபெறுகின்றது.
நாங்கள் வளங்களை அதிகரிக்கும்போது தகவல் தொழில்நுட்ப மாவட்டமாக இதனை மாற்றும் வகையிலான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். நான் இங்குள்ளவர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றேன், ஆங்கில கல்வியை மாணவர்கள் கற்று ஸ்மார்ட்டான பிரஜைகளாக மாறவேண்டும். ஸ்மார்ட்டான கல்வி, ஸ்மார்ட்டான பாடசாலை, ஸ்மார்ட்டான மாணவன், ஸ்மார்ட்டான இளைஞன், ஸ்மார்ட்டான பிரஜைகள் உருவாகுவதன் மூலம் நாட்டினை ஸ்மார்ட்டாக கொண்டு செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
கல்வியின் மூலம் நாங்கள் எதனையும் சாதிக்கமுடியும். கல்வி என்பது யாராலும் திருட முடியாதது, அழிக்க முடியாதது. கல்வி கற்பதன் மூலம் எமது அடிப்படை விடயங்களை மாற்றியமைக்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்திசெய்யவேண்டும். அதற்கான நிகழ்ச்சி நிரல் எங்களிடம் இருக்கின்றது.