திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெறுபேறுகள், நேற்றையதினம் (3) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவிகள் அவ்வாறு பரீட்சை எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்ட உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் (15.06.2024) முறைப்பாடு செய்துள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.