நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய அரசாங்கமும் காவல்துறையினரும் காட்டிய அவசரத்தை டயனா கமகே விடயத்தில் ஏன் காண்பிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்தப்படுகிறதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் இரட்டை குடியுரிமை விவகார வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து பிற்போடப்படுகிறது.
முறைகேடான முறையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ள விவகாரத்தில் டயனா கமகேவை கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரை இதுவரை கைது செய்யாததற்கான காரணம் என்ன?
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு அரசும் காவல்துறையினரும் காட்டிய அக்கறை மற்றும் அவசரம் டயனா கமகே விவகாரத்தில் ஏன் காண்பிக்கப்படவில்லை?” என்றார்.