சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவால் கடந்த ஏப்ரல் மாதம் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெறும் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான செயல்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தின் முதன்மையான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சபாநாயகரிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.